latest

LATEST:

Grab the widget  IWeb Gator

Archives

gravatar

நான் தீவிரவாதி ஆனது எப்படி?


அழகான ஊர் பாரதிராஜா படத்தில வர்ரமாதிரி பச்ச பசேல்னு எங்கு பார்த்தாலும் பசுமை இப்படிலாம் எங்கூரப்பத்தி எழுதனும் ஆசை பொய் சொல்ரது அவ்வளவா நல்லா இல்லஇருந்தாலும்
எனக்கும் எனது நண்பர்களுக்கும் எங்கூரும் எமது மாவட்டமும் அழகு தான்.

காலேஜ் முடிஞ்சு போச்சு அடுத்து நல்ல வேலை- சேர்ந்து கைநிறையா சம்பாதிக்கனும்னு கெட்ட எண்ணம்லாம் இல்ல. சென்னையில தங்கி அழுத்து போர வரைக்கும் சென்னையே சுத்தனும், சென்னையே சுத்தனும், சென்னையே சுத்தனும், இது மட்டும் தான் எண்ணம்.

சென்னைக்கு போறதுக்கு வீட்ல காரணம் வேணும் இது சப்ப மேட்டர் எல்லாறையும் போல வேலை தேடி கைநிறையா சம்பாதிக்கப்போறோம்னோம் வேணாம்னு சொல்ற வீடு ஏது, “இரவு சேது எக்ஸ்பிரஸ் அடுத்த நாள் காலை எழும்புர் அங்கிருந்து நேரா சென்னை கடற்கரை (பீச் ஸ்டேசன்) மண்ணடி அங்கப்பன் நாயக்கன் தெருவில் மேன்ஷன்”.
வந்த நாள் பகல் முழுவதும் துாங்கிட்டு மாலை முதன் முதலில் சென்னை வந்த முதல் திட்டம் மெரினா பீச் போய் சுத்தனும் திட்டம் நிறைவேறிய உடன் மறுநாளைக்கான திட்டம் ரூமுக்கு வந்த உடனே ரெடி அது ஸ்பென்சர்க்கு ஷாப்பிங் போய் ஒன்னும் வாங்காம சாந்தில இரண்டாமாட்டம் சினிமா பார்க்கனும்.

நாங்க போட்ட திட்டப்படி எல்லாமே சரிய நடந்தது, 3மணிக்கு எழுந்து சாப்பிட்டு குளித்து 5மணிக்கு ரெடியாகி ஸ்பென்சருக்கு வந்தாச்சு முழுவதும் சுத்தி கால் வழி வந்ததுக்கு அப்புறம் சுமார் 9, 9:30 மணிப்போல திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு வந்தோம் டிக்கெட் எடுத்து, புது பழக்கம் நம்பர் பார்த்து சீட்டை தேடி பிடித்து படத்தை பார்த்து முடித்தோம் எங்க திட்டப்படி எல்லாமே சரியா நடந்தது தியேட்டரை விட்டு வெளியே வந்தா இது சென்னையா இல்ல நம்மூரா (இது கொஞ்சம் ஓவர் தான்) ஒரு காக்கா இல்ல லாரி மட்டும் அங்கும் இங்கும் போய்க்கொண்டு இருக்க அங்கேயே ஒரு திட்டம்.

அங்கு இருந்து ரூம்மிற்கு நடந்து போவது, திட்டம் போட்டகூடனேயே சரிய நிறைவேற்றுவது எங்க கொள்கை.


நடந்து வரும் போது அண்ணாசாலை ஆரம்பத்தில் பெரியார் சிலையே கடக்கும் போது பள்ளிலே படிச்ச ஞபகம் "தொண்டு செய்து பழுத்த பழம் துாய தாடி மார்பிள் விழும்-னு" அந்த பெரியார் இவர் தானா இந்த கற்சிலை வணங்ககூடாதுனு சொன்ன அந்த பெரியாரோட கற்சிலை இது தானானு அங்கே உள்ள கல்வெட்ட பார்த்து படிச்சுக்கிட்டே நகர்ந்தா பக்கத்தில காவல் துறை அதாங்க போலீஸ் வண்டி

டே இங்க வாங்கடா ! என்ன சார்னு பக்கத்துல போனம்

பெயர் என்னடா?

முகம்மது ஜியாவுதீன்
அஹமது சர்புதீன்
முகம்மது ஃபாசில்
முகம்மது சமீம்

எங்க பெயர கேட்டதும் போலீஸ்கார் முகத்தில் சின்ன மாற்றம் ஒரு வேலை எங்க நான்கு ஒருத்தன் எங்க ஊர் 2வது வார்டு கவுன்சிலர் தம்பி அதனால பயந்துட்டாரோ.

வண்டில ஏற்றானு சொல்ல

வண்டில ஏற்னோம்

எங்க இருந்து டா வர்றீங்க?

சார் சக்கெண்ட் ஷோ சினிமா பார்த்துட்டு வர்றோம் சார் இந்தா இருக்கு டிக்கெட் சார்

யோவ் ஏட்டு அத முதல்ல வாங்குயா

அரசு கொடுத்த வயர்லஸ்ல பேசுறாரு நம்ம போலீஸ்கார்

அண்ணாசலை- நான்கு பேர தீவிரவாதினு சந்தேகத்தின் பேர்ல புடுச்சு வச்சு இருக்கோம் OVER”

நாழு பேரும் தியேட்டர்ல ஏதோ சதி திட்டம் தீட்டி இருக்காங்க அதற்கான ஆதாரம் அவங்க கையில இருக்கு OVER”

இது வரை புரியாதது:-

1)மெரினா பீச்சுக்கு போகனும் ஸ்பென்ஸர்ல சுத்தனும் சாந்தில படம் பார்க்கனும்னு எங்க திட்டத்தை போலீஸ்ல யார் சொல்லி இருப்பா?

2)ரூம்ல தான் திட்டம் போட்டோம் ஆனா போலீஸ் தியேட்டர்ல திட்டம் போட்டதா சொல்லுதே நாங்க தான் தியேட்டர்ல ஒன்னுமே பேசலையே

3)மெட்ராஸ்ல தியேட்டர்க்கு போனா தீவிரவாதினு ஏன் எங்க ஊர்ல ஒரு பயபுள்ளையும் சொல்ல-

gravatar

பாஸிஸ காவல்துறையும் இரட்டைவேட ஊடகங்களும்!


பொதுவாகவே இந்தியக் காவல்துறையும் உளவுத்துறையும் காவிமயமாக்கப்பட்டுள்ளது என்றதொரு குற்றச்சாட்டு நீண்டகாலமாக உண்டு. முஸ்லிம் மற்றும் சிறுபான்மையினரின் கல்வி, பொருளாதார, அரசியல் நிலைகளைக் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட சச்சார் கமிட்டியின் அறிக்கையும் கிட்டத்தட்ட இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

இதில் மும்பைக் காவல்துறையின் செயல்பாடுகளை எடுத்துக் கூறமுடியும். அந்த அளவிற்கு மும்பைக் காவல்துறையின் பாஸிஸ, காவி முகம் 1992 பாபரி மஸூதி குண்டுவெடிப்பின்போது மும்பையில் நடத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான இனக்கலவரத்தில் வெளிப்பட்டது. அதன் பின்னர், பல்வேறு தருணங்களில் மும்பைக் காவல்துறையின் முஸ்லிம் விரோதச் செயல்பாடுகள் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருந்தாலும் அவை ஊடகத்துறையில் ஊடுருவியுள்ள பாஸிஸக் கூட்டாளிகளின் கைங்கர்யத்தால் மக்களிடையே வெளிப்படாமலேயே மறைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் எந்த ஒரு அசம்பாவிதம் நடந்தாலும் அதிலும் குண்டுவெடிப்பாக இருந்து விட்டால் உடனடியாகச் சில முஸ்லிம் இளைஞர்களைக் கைது செய்து, முஸ்லிம் சமுதாயத்தைக் கூண்டில் நிறுத்துவது இப்பாஸிஸக் காவல்துறையின் வாடிக்கையான செயல். அவ்வேளைகளில் காவல்துறைக்குப் போட்டியாக ஊடகங்களும் நான் முந்தி, நீ முந்தி என இல்லாத "இஸ்லாமியத் தீவிரவாதத்தை" முஸ்லிம் பெயர்களில் சந்தைப் படுத்துவது வழக்கம்.

மாறிவரும் வேக உலக நடப்புகளில் மாய்ந்து போகும் குண்டுவெடிப்புகளின் வடுக்களோடு, அதில் தொடர்புடையவர்களாகக் கைது செய்யப்பட்டு "தீவிரவாதிகளாக்கப்பட்ட" முஸ்லிம் இளைஞர்களின் கதையையும் மக்கள் மறந்து விடுகின்றனர். மறந்து விட்ட மக்களுக்கு எதற்காக வீணாக நினைவுபடுத்த வேண்டும் என்று நினைத்தார்களோ என்னவோ, பல வழக்குகளிலும் 'அவசரமாக'க் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் விசாரணைகள் மூலம் அதிர்ஷ்டவசமாக நிரபராதிகள் எனத் தெளிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்படும்போது, ஆரம்பத்தில் "முஸ்லிம் தீவிரவாதிகள்" எனவும் புதிய-புதிய பெயர்களில் அறிமுகப்படுத்தப்பட்ட இல்லாத தீவிரவாத இயக்கங்களையும் காவிக் கூட்டணி அமைத்துள்ள பாஸிஸ ஊடகங்களும் மறைத்து விடுகின்றன.

இதற்குச் சரியான எடுத்துக்காட்டு, மும்பைத் தாக்குதலின்போது ஆரம்பத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட சிமியின் புதிய தென்னகப் பதிப்பு என்று சொல்லப் பட்ட, "டெக்கான் முஜாஹிதீன்!". ஒவ்வொரு குண்டுவெடிப்புகளின் பின்னணியிலும் செயல்பட்ட/படும் உண்மையான தீவிரவாதிகளால் உருவாக்கப்படும் இந்தப் புதுப்புது தீவிரவாத இயக்கங்களின் பெயர்கள், பிந்தைய காலங்களில் முஸ்லிம் இளைஞர்களை வேட்டையாடுவதற்கு வசதியாக உளவுத்துறையின் தலைமையகங்களில் பதியப்பட்டு விடுவது வழக்கம்.

ஆனால், டெக்கான் முஜாஹிதீன் விவகாரத்தில் மட்டும் "மும்பைத் தாக்குதலை நடத்தியவர்கள் நாங்கள்தான்" என ரஷ்ய/கனடாவிலிருந்து டெக்கான் முஜாஹிதீன் பெயரில் மின்னஞ்சல் அனுப்பிய ஆசான்கள் தயவால் பிழைத்துக் கொண்டது. ஆரம்பத்தில் "டெக்கான் முஜாஹிதீன்" பெயரில் ரஷ்யாவிலிருந்து வந்த மின்னஞ்சலை மையப்படுத்தி விழாக் கொண்டாடிய பெரு ஊடகப் பணமுதலைகள், இப்பொழுது அதனைக் குறித்து வாயைத் திறப்பதே இல்லை.

அதனைப் போன்ற மற்றொரு பெயர்தான், மும்பைத் தாக்குதலுக்கு முன்னர் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளின்போது அறிமுகப்படுத்தப்பட்ட சிமியின் இல்லாத "இந்தியன் முஜாஹிதீன்" கிளை அமைப்பும். அத்தகையதொரு இல்லாத நிழல் இயக்கம் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக அந்தக் குண்டுவெடிப்புகளின்போது குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் பலரை, அவ்வியக்கங்களின் நிறுவனர்களாகவும் துணை நிறுவனர்களாகவும் காவல்துறையும் ஊடகங்களும் அறிமுகப்படுத்தின. அவர்களைக் "கண்டு பிடித்த"க் காவலர்களுக்குச் சிறப்புப் பரிசுகளும் அறிவிக்கப் பட்டன.

அதில் ஒருவர்தான் சாதிக் ஷேக் என்பவர். இரயில் குண்டு வெடிப்புகளில் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்பட்டுக் கைது செய்யப்பட்ட இவரை, "இந்தியன் முஜாஹித்தீன் (IM) அமைப்பின் துணை நிறுவனராக" மும்பைக் காவல்துறை அறிமுகம் செய்தது. அப்போது இவரைக் குறித்துப் பக்கம் பக்கமாக செய்திகள் வெளியிடாத ஊடகங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இறுதியாக, இந்த சாதிக் ஷேக் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும் அவர்தான் இந்தியன் முஜாஹிதீனின் துணை நிறுவனர் என அவர் பொறுப்பேற்றுக் கொண்டதாகவும் இத்தகைய செயலுக்கு அவர் வருந்துவதாக அவர் வாக்குமூலம் அளித்ததாகவும் பாஸிஸ ஊடகங்கள் பொய்களைக் கடைபரப்பின.

தற்பொழுது, குற்றங்களை 'ஒப்புக் கொண்ட' அதே சாதிக் ஷேக் நிரபராதி எனவும் அவருக்கும் இரயில் குண்டுவெடிப்புக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை எனவும் அப்பாவியான அவரை மும்பைக் காவல்துறை பொய்க் குற்றம் சுமத்தி குற்றவாளியாக்கியதாகவும் கூறி, மும்பைத் தீவிரவாதத் தடுப்புத் துறை (ATS) அவரை விடுதலை செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன. அவரது விஷயத்தில் மும்பைக் காவல்துறை செய்த அநியாயத்தைக் குறித்துத் தீவிரவாதத் தடுப்புத் துறை கூறும் தகவல் இதோ:

கடந்த 2006ஆம் வருடம் ஜூலை 11ந் தேதி நிகழ்ந்த இரயில் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர் என சந்தேகிப்பட்டு, மும்பைக் காவல்துறையால் கைது செய்யப்பட்டார் சாதிக் ஷேக். அதன் பின் தொடர்ச்சியாக நடந்த விசாரணைக்குப் பிறகு தற்போது "குண்டு வெடிப்பிற்கும் இவருக்கும் தொடர்புள்ள எந்தவோர் ஆதாரமும் கிடைக்காத காரணத்தினால் குற்றமற்றவர்" என்று நிருபணமாகியுள்ளதாக ATS அறிவித்துள்ளது.

ATS விசாரணையின் ஒரு பகுதி!

"குற்றத்தை சாதிக் ஒப்புக் கொண்டார்!" என மும்பை குற்றப்பிரிவு இதுநாள்வரை கூறிவந்த தகவல் பொய்யானது என்பது வேறு வகையில் நிரூபணம் ஆகியுள்ளது.

மும்பையின் forensic science laboratory ஏ.டி.எஸ் இடம் சமர்ப்பித்துள்ள ஆய்வுகளான மூளையில் பதிவாகும் விஷயங்களைக் கண்டறியும் (brain mapping) மற்றும் பாலிகிராஃப் (polygraph) ஆகிய சோதனைகளின் மூலம் சாதிக், குற்றமற்றவர் என்று நிருபணம் ஆகியிருப்பதோடு, குற்றத்தினை ஒப்புக் கொள்ள வற்புறுத்தப் பட்டுள்ளார் என்பதையும் காட்டிக் கொடுத்திருக்கிறது.

இந்தத் திடுக்கிடும் தகவல், இவ்வழக்கில் பெரும் திருப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அப்பாவி சாதிக்கைக் குண்டு வெடிப்பில் தொடர்பு படுத்திய மும்பை குற்றப்பிரிவு, அஹமதாபாத் காவல்துறையினர் மற்றும் டெல்லி காவல்துறையினர் ஆகியோரின் கூற்று ஒட்டுமொத்தமான பொய் மூட்டைகள் என்று நிருபணம் ஆகியுள்ளது.


ATS இன் இந்த அறிவிப்பு மும்பையின் குற்றப்பிரிவுக் காவல்துறைக்குப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2008 செப்டம்பர் மற்றும் அக்டோபரில் மும்பைக் குற்றப்பிரிவு (Mumbai crime branch) காவல்துறையினர், 21 பேரைக் கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இந்தியன் முஜாஹித்தீன் அமைப்பினைச் சேர்ந்தவர்கள் என்றும், விசாரணையின்போது குண்டு வெடிப்பிற்கும் தனக்கும் தொடர்பிருப்பதாக சாதிக் ஒப்புக் கொண்டதாகவும் மும்பைக் குற்றப்பிரிவு தகவல் வெளியிட்டது.

மும்பைக் குற்றப்பிரிவு வெளியிட்ட அந்தத் தகவல் ATSக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏனெனில், இதே சம்பவம் தொடர்பாக ATS ஏற்கனவே தனது விசாரணையின் கீழ் பதிமூன்று பேரைக் கைது செய்திருந்தது. மேலும், கைது செய்யப்பட்டவர்கள் சிமி உறுப்பினர்கள் என்ற சந்தேகக் கண்ணோடு பதினோரு ஆயிரம் பக்கங்கள் அடங்கிய குற்றப் பத்திரிகையை ATS தயாரித்திருந்தது.

இச்சூழலில், மும்பைக் குற்றப்பிரிவின் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, தமது விசாரணையை சாதிக் பக்கம் திருப்பிய ATS, இரண்டு வாரங்கள் கடும் விசாரணையை அவரிடம் மேற்கொண்டது. விசாரணையின் இறுதியில், மும்பைக் குற்றப்பிரிவின் அறிவிப்பு தமக்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக ATS அறிவித்துள்ளது.

"முப்பத்தியொரு வயதான சாதிக்கைக் கடந்த பிப்ரவரி 28ம் தேதி கைது செய்து நாங்கள் விசாரணையைத் துவக்கினோம். இருவாரத் தொடர் விசாரணையில் ரெயில் குண்டுவெடிப்பிற்கும் சாதிக்கிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது தெளிவானது. மேலும் தொடர்புடைய ஆதாரங்கள் ஏதும் கிடைக்க வில்லை!" என்றார் ATS அதிகாரி ஒருவர்.

ATS தற்போது செய்வதறியாமல், நீதிமன்றத்தில் தனது தரப்பிலான புகாரைச் சமர்ப்பிக்க உள்ளது. இதன் மூலம் சாதிக் குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப் படுவார் என்று ATS அறிவித்துள்ளது.

அதே சமயத்தில், தான் தவறு இழைத்துவிட்டதாகவும் அதற்காக வருந்துவதாகவும் சாதிக் கூறியதாக, ஒரு செய்தி ஊடகம் திரித்து வெளிட்ட சிடி வெளியீட்டினை ATS கடுமையாகக் கண்டித்துள்ளது.

குண்டுவெடிப்புகளும் அசம்பாவிதங்களும் நிகழும் வேளைகளில் காவிமயமாக்கப்பட்டுள்ள காவல்துறையும் ஊடகங்களும் போட்டியிட்டுக் கொண்டு முஸ்லிம் இளைஞர்களைத் தீவிரவாதிகள் எனக்கூறி அவர்களின் வாழ்க்கையோடு விளையாடும் அதே வேளையில், தொடர் விசாரணைகளின்போது அதிர்ஷ்டவசமாக யாரையாவது நிரபராதி எனக் கண்டறியப்பட்டால், அவர் தொடர்பாக அவிழ்த்து விடப்பட்ட தீவிரவாதக் கட்டுக்கதைகளைக் குறித்தோ அவரது வாழ்க்கை சீரழிந்துள்ளதைக் குறித்தோ எவ்விதக் குற்ற உணர்வும் இன்றி, அச்செய்திகளைக் கண்டுகொள்வதையே இந்த ஊடகங்கள் தவிர்த்து விடுகின்றன. ஊடகத்துறையின் நம்பகத்தன்மைக்கு வேட்டு வைக்கும் விதத்தில் காவித்துவம் ஆணிவேராக ஆகிவிட்ட ஊடகங்களிடமிருந்து நியாயங்களை எதிர்பார்ப்பதில் இனியும் எவ்வித அர்த்தமுமிருப்பதாகத் தெரியவில்லை.

நீதிக்காவும் நியாயத்திற்காகவும் புதைக்கப்படும் உண்மைகளுக்காகவும் காவிமயமாகி விட்ட ஊடகத்துறையைச் சீர் செய்வதற்காகவும் இறைமார்க்கத்தினர் எழுதுகோல் ஆயுதம் ஏந்த வேண்டியது கட்டாயக் கடமை.

கடமையை நிறைவேற்றுவார்களா?


- நன்றி சத்தியமார்க்கம்.காம்

gravatar

எதிரிகளுக்கு அஞ்சாத அருமை சகோதரர் சதாம் உசேன்


சதாம் உசேன் அப்த் அல்-மஜித் அல்-திக்ரிதி (அரபு மொழி: صدام حسين عبد المجيد التكريتي), (பிறப்பு: ஏப்ரல் 28, 1937 1, இறப்பு: டிசம்பர் 30, 2006) முன்னாள் ஈராக் நாட்டின் அதிபராவார். இவர் ஜூலை 16, 1979ல் இருந்து ஏப்ரல் 9 2003 வரை அமெரிக்கா தலைமையிலான ஈராக் படையெடுப்பு வரையில் இவர் அந்நாட்டின் அதிபராக இருந்தார்.

ஈராக்கின் பாத் கட்சியின் முக்கிய நபரான சதாம் 2 1968ல் அக்கட்சி நடத்திய அதிகார கைப்பற்றலில் முக்கியப் பங்கு வகித்தார். தனது நெருங்கிய உறவினரான ஜெனரல் அகமது பாக்கரின் (أحمد حسن البكر) கீழ் துணை அதிபராகப் பணியாற்றிய சதாம், அரசுக்கும் ஆயுதப் படைகளுக்கும் இடையேயான பிரச்சினைகளை கடுமையாக அடக்கி ஆண்டு, அரசு இயந்திரத்தின் மீதான தன் கட்டுப்பாட்டை வலுவாக்கிக் கொண்டார்.

அதிபராகப் பொறுப்பு வகித்த சதாம், யதேச்சிகார அரசை (authoritarian government) நடத்தினார். ஈரான்-ஈராக் போர் (1980–1988) மற்றும் பெர்சியக் குடாப் போர் (1991) நடந்ந காலங்களிலும் அதிகாரத்தை தன் கைப்படியில் வைத்திருந்தார். இக்காலகட்டங்களில் ஈராக் மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்ததோடு அவர்களின் மனித உரிமைகளுக்கும் பங்கம் ஏற்பட்டது. சதாமின் அரசு, விடுதலை அல்லது தன்னாட்சியை வலியுறுத்திய, இனம் அல்லது சமயம் சார் இயக்கங்களை மட்டுப்படுத்தியது.

மேலை நாடுகளிடம், குறிப்பாக ஐக்கிய அமெரிக்க மாநிலங்களிடம், அவர் காட்டிய எதிர்ப்பை மெச்சி, பல அராபிய மக்கள் அவரை ஒரு பிரபலத் தலைவராகக் கருதினாலும், அனைத்துலக சமுதாயத்தினர் பலரும் அவரை சந்தேகக்கண் கொண்டே நோக்கினர். அதுவும் 1991 பெர்சிய குடாப் போருக்கு அடுத்து சில ஈராக்கி குழுக்கள் சதாமின் பாதுக்காப்பு படை குறித்த அச்சத்துடன் வாழ்ந்தனர்.

ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள் மற்றும் அதன் கூட்டாளிகள் இணைந்து மேற்கொண்ட 2003 ஈராக் போருக்கு பிறகு சதாமின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. டிசம்பர் 13, 2003 அன்று திக்ரித்துக்கு வெளியே உள்ள பாதாள அறை ஒன்றில் ஒளிந்திருந்த சதாமை அமெரிக்கப் படையினர் கைது செய்தனர். பல மனித உரிமை மீறல் வழக்குகள் தொடர்பாக இடைக்கால ஈராக் அரசு அமைத்திருக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சதாம் விசாரிக்கப்பட்டார். நவம்பர் 5, 2006 இல் அவருக்கு தூக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

டிசம்பர் 26, 2006 இல் சதாமின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டு மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது. டிசம்பர் 30, 2006 உள்ளூர் நேரம் 06:05 மணிக்கு அவர் தூக்கிலிடப்பட்டார்.

எதிரிகளின் பார்வையில் அவர் ஒரு அரக்கன், சர்வாதிகாரி. எதிரிகளை ஈவு இரக்கமின்றி கொன்றுவிடும் சுபாவம் உடையவர். ஆனாலும், ஈராக் மக்களுடைய ஆதரவுடன், சுமார் 20 ஆண்டுகள் ஆட்சியை நடத்திய சதாம், தற்போது அமெரிக்கப் படைகளின் பிடியில். அவருடைய வாழ்க்கையை ஒருமுறை அலசிப் பார்க்கும்போது, நமக்கு கிடைத்தவை:

குழந்தை பருவம் :

1937 ஏப்ரல் 28 தேதியன்று திக்ரித்திற்கு பக்கத்திலுள்ள "அல்_ஒளஜா" என்ற கிராமத்தில் சதாம் பிறந்தார். அவருடைய குழந்தை பருவம் பல கஷ்டங்களுடன் இருந்தது. தாய் சுபா கர்ப்பமாக இருக்கும்போதே, அப்பா இறந்தார். சதாம் பிறந்த பிறகு, சுபா மற்றொருவரை மணக்க, அந்த மாற்றான் தந்தை சதாமை பல கொடுமைகளுக்கு ஆளாக்கினான். சிறு வயதிலேயே ஆடுகளை மேய்க்கவும், திருடவும் சதாமை அனுப்புவார் அந்த மாற்றாந்தந்தை. இதனால் சதாம் தன்னுடைய 10ஆவது வயதில், வீட்டிலிருந்து வெளியேறி, தாய் மாமன் கைருல்லா தல்பாவிடம் தஞ்சம் புகுந்தார்.

படிப்பு :

சதாம் உசேனுக்கு பத்து வயது வரைக்கும் "அ, ஆ..." கூட தெரியாது. மாமன் கைருல்லாதான் சதாமுக்கு படிப்பு சொல்லித் தந்தார். பாக்தாத் பல்கலைக்கழகத்தில் சதாம் படிப்பு நடந்தது. ஈஜிப்ட் நாட்டில் தலைமறைவாக வாழும்போது, சட்டப் படிப்பை முடித்தார். அங்குதான் ஸ்டாலின் பற்றி முழுமையாகப் படித்தார். அவருடைய மேசையிலும், பீரோக்களிலும் ஸ்டாலின் பற்றிய புத்தகங்கள்தான் அதிகமாக இருக்குமென்று சொல்வார்கள். அரபு தேசீய வாதத்தை சதாமிற்கு சொல்லிக் கொடுத்தது மாமன் கைருல்லா தலாஃபாதான் என்பார்கள்.

குடும்பம்:

சதாம் எத்தனை பேரை கல்யாணம் செய்து-கொண்டாரென்பதைப் பற்றி யாருக்கும் தெரியாது. ஆனால், இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் இருப்பதாக உலகத்துக்குத் தெரியும். மகன்கள் காஸே உசேன், உதய் உசேன் சதாமுக்கு இடது, வலது கைகள் போன்றவர்கள். அமெரிக்கப் படையெடுப்பின்போது, இவர்கள் கொல்லப்பட்டனர். மருமகன் உசேன் கமால், பல விஷயங்களில் மாமாவுக்கு துணையாக இருந்தார். ஆனால், குடும்பத் தகராறில் மகள்கள், மருமகன்களும் ஜோர்டான் நாட்டுக்கு ஓடிப்போனார்கள்.

சுபாவம் :

ஆரம்பத்திலிருந்து சதாம் உசேன் போராட்ட குணம் உடையவர்தான். அந்த போராட்ட குணத்துடனே, கொடூர குணமும் இருந்தது. தன்னை எதிர்த்தவரை ஈவு இரக்கமின்றி கொல்வதுதான் சதாமின் ஸ்டைல். தன்னை அதிபர் பதவியிலிருந்து விலகச் சொன்ன சுகாதார அமைச்சரைக் கொன்றதும், புரட்சி செய்த குர்த்துக்களின் மேல் இராசாயன ஆயுதங்களை பிரயோகித்ததும் இந்த கொடூரம்தான். சதாமுக்கு சிறு வயதலிருந்தே மேற்கத்திய நாடுகள் என்றால் அறவே பிடிக்காது. அரபு நாடுகளையெல்லாம் ஒரே குடையின்கீழ் கொண்டு வரவேண்டுமென்பது அவருடைய கனவு.

அரசியலில்...

மாமன் கைருல்லாவிடம் அரசியலை பற்றி கற்றுக் கொண்ட சதாம், 1957_ல் பாத் கட்சியில் சேர்ந்தார். சுயநலத்துடன், நம்பியதைத் துணிச்லாக செய்யும் யுக்தியுடன், பாத் கட்சியின் துணைத் தலைவராக வளர்ந்தார். 1979_ல் ஈராக் நாட்டின் தலைவராக பொறுப்பேற்றார். அன்றிலிருந்து 2-0 வருடங்கள் ஜனாதிபதியாக இருந்தார். ஈராக்கில் பாத் கட்சியை பட்டித்தொட்டியிலும் பரப்பவிட்ட புகழ், சதாம் உசேனைத்தான் சேரும்.

புரட்சிகள்:

1956 ஈராக் மன்னர் ஃபைஜல்_2க்கு எதிரான புரட்சியில் சதாம் பங்கேற்றார். 1959_ல் ஈராக் ஆட்சிப் பொறுப்பிலிருந்த ஜெனரல் காசிம்மை கொல்ல முயற்சி செய்து, அந்த முயற்சியில் தோல்வியுற்றார். அப்போது தன் காலில் பாய்ந்த புல்லட்டை கத்தியுடன் அவரே அகற்றினார். இருந்தாலும், அவருக்கு ஒரு தலைவனாக மதிப்பு கிடைத்தது. பிறகு கைரோவுக்கு ஓடிப்போனார். 1963_ல் தன் சொந்த நாட்டுக்குள் நுழைந்தார். அதிபரான பிறகு, ஈராக்கில் ஷியாக்களின் புரட்சியை வடக்கு ஈராக்கில் குர்த்துக்களின் புரட்சியை இரும்பு கரங்களுடன் அடக்கினார்.

யுத்தங்கள்:

சதாம் உசேன் அரபு நாடுகளுடன் தோழமையுடன்தான் இருந்தார். ஆனால், அரபு நாடுகள்தான் அவரை தூரமாக வைத்திருந்தன. பக்கத்திலுள்ள குவைத் நாட்டின் மேல் படையெடுத்து, அந்நாட்டிற்கு எதிரியானார். சௌதீ அரேபியாவுடனும் வைரம்தான். சிரியா, ஜோர்டன் நாடுகளுக்-கு நல்ல நண்பன். இஸ்ரேல் யூத ஐக்கிய வாதமென்றால், எரிச்சல். அமெரிக்கா, இங்கிலாந்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அதிபரான ஓராண்டிற்குள்ளேயே, ஈரானுடன் போர் தொடங்கினார். அந்தப் போர் 8 ஆண்டுகள் தொடர்ந்தது. 1990 ஆகஸ்ட் 2ம் தேதியன்று சதாம் படைகள் குவைத் நாட்டை ஆக்கிரமித்தன.

1991_ல் அமெரிக்கப் படைகள் தோழமை நாடுகளின் உதவியுடன் ஈராக்கின் மேல் படையெடுத்து குவைத் நாட்டை மீட்டுவிட்டன. ஆனால், அந்தப் போரினால் ஈராக் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்தது. இந்த ஆண்டு மார்ச் 20 தேதியன்று, அமெரிக்கப் படையெடுப்பின் காரணமாக சதாம் தலைமறைவானார்.

சதாம் உசேன் எப்படி பிடிபட்டார்?!

எங்கே : சொந்த ஊர் திக்ரிட் பட்டணத்திற்கு 16 கி.மீ. தொலைவிலுள்ள அத்வரில்.... தன்னுடைய பண்ணை வீட்டின் சுரங்கத்தில் தூங்கிக் கொண்டு.

எப்போது : சனிக்கிழமை இரவு 11 மணி அளவில்.

எப்படி : கடந்த பத்து நாட்களாக அமெரிக்கா படைகள் சதாம் பந்துக்களை இண்டராகேட் செய்து வருகின்றன. அவர்கள் கொடுத்த தகவலின்படி, அங்கு சென்ற அமெரிக்க படைகளுக்கு சில கற்கள், மண்ணும் தெரிந்தன. அந்த மண்ணை எடுத்தபோது, அங்கு ஒரு குழி தெரிந்தது. அங்கு 7_8 அடி ஆழத்தில், சதாம் தூங்கிக் கொண்டிருந்தார். எந்தவிதமான சத்தமும் செய்யாமல், அமெரிக்க படைகள் சதாமை பிடித்தன.

சதாம்தானா? : ஈராக்கின் முன்னாள் வெளியுறவுத்துரை அமைச்சர் தாரீக் அஜீஜ் சதாம் உசேனை அடையாளம் கண்டுகொண்டார். வாயிலிருந்து சாம்பில்ஸ் எடுத்து பிடிபட்டவர் சதாம்தான் என்று உறுதிப்படுத்தினார்கள்.

gravatar

செருப்பின் செய்தி !! – அல் ஜய்தி


குறிப்பு: ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த ‘குற்றத்திற்காக’ ஒன்பது மாத சிறை வாசத்திற்குப் பின், கடந்த வாரம் விடுதலையாகியுள்ள முன்தாஜர் அல் ஜய்தி எழுதிய கீழ்க்காணும் கட்டுரை, கார்டியன் செய்தித்தாளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது . அதன் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது.


நான் விடுதலையடைந்து விட்டேன்.
ஆனால், எனது நாடு இன்னமும்
போர்க் கைதியாக சிறை வைக்கப்பட்டிருக்கிறது.
செயல் குறித்தும்,
செயல்பட்டவர் குறித்தும்,
நாயகனைக் குறித்தும்,
நாயகத்தன்மை வாய்ந்த செயல் குறித்தும்,
குறியீடு குறித்தும்,
குறியீடான செயல் குறித்தும்
நிறையப் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
ஆனால், எனது எளிமையான பதில் இதுதான்.

என் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும்,
எனது தாயகத்தை
ஆக்கிரமிப்பானது எவ்வாறு தனது பூட்சுக் கால்களால்
நசுக்கி இழிவுபடுத்த விரும்பியதென்பதும்தான்,
என்னை செயல்படக் கட்டாயப்படுத்தியது.

கடந்த சில ஆண்டுகளில்,
ஆக்கிரமிப்பின் துப்பாக்கி ரவைகளுக்கு இரையாகி
பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட தியாகிகள்
தமது இன்னுயிரை இழந்தார்கள்.
கணவனை இழந்த பத்து இலட்சம் பெண்களும்,
ஐம்பது லட்சம் அனாதைகளும்,
உடல் உறுப்புகளை இழந்த லட்சக்கணக்கான மக்களும்
நிறைந்து கிடக்கும் தேசம்தான்
இன்றைய இராக்.

நாட்டுக்குள்ளும், வெளியிலும் இலட்சக்கணக்கானவர்கள்
அகதிகளாய் உழன்று கொண்டிருக்கிறார்கள்.

துருக்கியர், அசிரியர், சபியர், யாசித்
அனைவரோடும் தனது அன்றாட உணவை
அரபு இனத்தவன் பகிர்ந்துண்ட ஒரு தேசமாக
நாங்கள் வாழ்ந்திருந்தோம்.

சன்னியுடன் ஷியா
ஒரே வரிசையில் நின்று வழிபட்ட காலமது.
கிறிஸ்துவின் பிறந்தநாளை
கிறிஸ்தவரோடு இசுலாமியர் இணைந்து கொண்டாடிய நாட்கள் அவை.
இவையனைத்தும்
பத்தாண்டுகளுக்கும் மேலான பொருளாதாரத் தடைகளுக்கிடையே,
பசியை பகிர்ந்து கொள்ள நேர்ந்த போதிலும் கூட
நீடித்திருந்தன.

எமது பொறுமையும், ஒற்றுமையும்
ஏவப்பட்ட ஒடுக்குமுறையை மறக்கவிடாமல் தடுத்தன.
ஆனால்,
ஆக்கிரமிப்போ
சகோதரர்களையும், நெருக்கமானவர்களையும்
பிரித்துத் துண்டாடியது.
எங்கள் வீடுகளை சுடுகாடுகளாக்கியது.

நான் நாயகனல்ல.
ஆனால் எனக்கு ஒரு கண்ணோட்டம் உண்டு.
ஒரு நிலைப்பாடு உண்டு.
எனது நாடு இழிவுபடுத்தப்படுவதைக் கண்ட பொழுது,
எனது பாக்தாத் நகரம் தீயில் கருகிய பொழுது,
எனது மக்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது,
நான் இழிவுபடுத்தப்பட்டவனாக உணர்ந்தேன்.
ஆயிரக்கணக்கான துயரம் தோய்ந்த காட்சிகள்
எனது மனதில் அலைமோதிக் கொண்டிருந்தன.
என்னை போரிடத் தூண்டின.

இழிவுபடுத்தப்பட்ட
அபுகிரைப்…பலூஜா, நஜாஃப், ஹடிதா, சதர் நகரம்,
பஸ்ரா, தியாலா, மொசூல், தல் அஃபர்
என ஒவ்வொரு இடத்திலும் நடைபெற்ற படுகொலைகள்…
ஒரு அங்குலம் குறையாமல் காயமுற்ற எனது நாடு…
எரியும் தேசத்தினூடாகப் பயணம் செய்து,
நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் வலியைக்
கண்ணால் கண்டேன்.

துயருற்றவர்களின் ஓலத்தை,
அனாதைகளாக்கப்பட்டவர்களின் அலறலை காதுகளில் கேட்டேன்.
ஒரு அவமானம் என்னை அழுத்தி வாட்டியது.
நான் பலவீனனாக உணர்ந்தேன்.

அன்றாடம் நிகழ்ந்த துயரங்களை தெரிவிக்கும்
ஒரு தொலைக்காட்சி நிருபராக,
எனது தொழில்சார்ந்த கடமைகளை முடித்த பின்னால்,
தரைமட்டமாக்கப்பட்ட இராக்கிய வீடுகளின்
இடிபாடுகளின்
தூசியையோ
அல்லது
ஆடைகளில் படிந்த இரத்தக் கறைகளையோ,
நான் தண்ணீரால் கழுவிய பொழுதுகளில்,
பற்கள் நெறுநெறுக்க,
பாதிக்கப்பட்ட எனது நாட்டு மக்களின் பேரால்
பழிக்குப் பழி வாங்குவேனென
நான் உறுதிமொழி எடுத்துக் கொள்வேன்.

வாய்ப்பு வழிதேடி வந்தது.
நான் அதனைக் கைப்பற்றிக் கொண்டேன்.

ஆக்கிரமிப்பினூடாகவும்,
ஆக்கிரமிப்பின் விளைவாகவும்
சிந்தப்பட்ட அப்பாவிகளின்
ஒவ்வொரு இரத்தத் துளிக்கும்,
வேதனையில் கதறிய ஒவ்வொரு தாயின் ஒலத்திற்கும்,
துயரத்தில் முனகிய ஒவ்வொரு அனாதையின் கண்ணீருக்கும்,
பாலியல் வன்புணர்ச்சியால் சிதைக்கப்பட்ட பெண்களின் அலறலுக்கும்,
நான் செய்ய வேண்டிய கடமையாகக் கருதியதனால்தான்
அச்செயலை செய்தேன்.

என்னைக் கண்டிப்பவர்களுக்கு நான் சொல்வது:
“நான் வீசியெறிந்த காலணி,
உடைந்து நொறுங்கிய எத்தனை வீடுகளை தாண்டி வந்திருக்கிறதென்று
உங்களுக்குத் தெரியுமா?
பலியான எத்தனை அப்பாவிகளின் குருதியைக் கடந்து வந்திருக்கிறதென்று
உங்களுக்குத் தெரியுமா?
எல்லா மதிப்பீடுகளும் மீறப்படும்பொழுது
செருப்புதான் சரியான பதிலடியாகத் தோன்றுகிறது.”

குற்றவாளியான ஜார்ஜ் புஷ்ஷின் மீது
செருப்பை வீசியெறிந்த பொழுது,
எனது நாட்டின் மீதான ஆக்கிரமிப்பை,
எனது மக்களைப் படுகொலை செய்ததை,
எனது நாட்டின் வளத்தை கொள்ளையடித்ததை,
அதன் கட்டுமானங்களை தரைமட்டமாக்கியதை,
அதன் குழந்தைகளை அகதிகளாக்கியதை,
நான் ஏற்க மறுக்கிறேன்
என்பதையே தெரிவிக்க விரும்பினேன்.

ஒரு தொலைக்காட்சி நிருபராக,
நிர்வாகத்திற்கு தொழில்ரீதியாக ஏற்பட்ட சங்கடத்திற்கும்,
ஒருவேளை நான் பத்திரிக்கை தருமத்திற்கும்
ஊறு விளைவித்திருப்பதாகக் கருதினால்,
அத்தகைய நோக்கம் எனக்கு இல்லாத போதும்,
எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒட்டுமொத்தத்தில்,
ஒவ்வொரு நாளும்
தனது தாயகம் இழிவுபடுத்தப்படுவதைக்
காணச் சகியாத ஒரு குடிமகனின்
அணையாத மனசாட்சியை
வெளிப்படுத்தவே நான் விரும்பினேன்.

ஆக்கிரமிப்பின் அரவணைப்பிற்குள்ளிருந்து
தொழில் தர்மம குறித்து முனகுவோரின் குரல்
நாட்டுப்பற்றின் குரலை விடவும் ஓங்கி ஒலிக்கக் கூடாது.
நாட்டுப்பற்று பேச விரும்பும் பொழுது,
அதனோடு தொழில் தர்மம இணைந்து கொள்ள வேண்டும்.

எனது பெயர் வரலாற்றில் இடம் பெறுமென்றோ,
காசு, பணம் கிடைக்குமென்றோ,
இதனைச் செய்யவில்லை.
நான் எனது நாட்டைக் காக்க மட்டுமே விரும்பினேன்.

-நன்றி வனவு வினை செய்!

gravatar

வளைகுடா மாப்பிள்ளை

இது என் நண்பரிடமிருந்து வந்த மடல்

வளைகுடா மாப்பிள்ளை
- மரியம் குமாரன்

துபாயிலிருந்து சுல்தான், மனைவி ஜமீலாவின் கடிதத்திற்கு கண்ணீர் மல்க பதில் எழுதிக்கொண்டிருக்கின்றான்.

அன்புள்ள மனைவிக்கு,

நமது தெருவிலேயே நமது வீடுதான் இரண்டு அடுக்கு மாடி வீடு என்று நீ எழுதிய செய்தி கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

சொந்த வீடே இல்லாமல் ஒரு ஓட்டு வீட்டில் கஷ்டப்பட்டு வாடகைக்கு குடியிருந்த நாம் இப்பொழுது தெருவிலேயே பெரிய வீடாக கட்டியிருக்கிறோம். அவ்வளவு பெரிய வீடு கட்டுவதற்கு நான் இங்கு எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா..? நான் பட்ட கஷ்டம் வீண் போகவில்லை என்பது குறித்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

நான் இன்னும் ஒரு மாதத்தில் ஊருக்கு வரலாமென இருக்கின்றேன். இது பற்றி உன் முடிவைச் சொல்..

என்று மனைவிக்கு கடிதம் எழுதி அனுப்பிவிடுகின்றான். ஒருவாரம் கழித்து மனைவி ஜமீலாவிடமிருந்து பதில் கடிதம் வருகின்றது

அன்புள்ள கணவனுக்கு

தங்களுடைய கடிதம் கண்டு மகிழ்ச்சி. நீங்கள் கூறியது போல நமக்கு சொந்தமாக வீடு வருவதற்கு அயல்தேச மண்ணில் நீங்கள் பட்ட கஷ்டங்களை நானும் அறிவேன்.

அதற்கு ஈடு இணையே இல்லை. எல்லாவற்றையும் நீங்கள் இழந்து நமக்கொரு வீடு உருவாவதற்கு பாடுபட்டுள்ளீர்கள்.

நீங்கள் இன்னும் ஒரு மாதத்தில் வருவதாக எழுதியிருந்தீர்கள். எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் இவ்வளவு கஷ்டப்பட்டு விட்டோம் . நமக்கென்று ஒரே ஒரு கார் எனது அக்கா மாப்பிள்ளை வாங்கியது போல வாங்க வேண்டும் என்று விருப்பம். ஆகவே அதற்கு மட்டும் எப்படியாவது வழிசெய்தீர்கள் என்றால் நாம் அவர்களுக்கு இனையாக இருக்கலாம்.

மனைவியின் கடிதத்தைக் கண்டு "அய்யோ மனைவியின் இந்த விருப்பத்தை நாம் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டுமே . இவ்வளவு கஷ்டப்பட்டு விட்டோம். அவள் விருப்பப் படி காருக்காகவும் கொஞ்சம் உழைப்போம்" என்று நினைத்து இன்னும் ஒரு வருடம் கழித்துச் செல்லலாமென முடிவெடுக்கின்றான்.

பின்னர் பல மாதம் கழித்து மனைவியின் விருப்பப்படி மனைவியின் அக்கா மாப்பிள்ளை வாங்கியதை விடவும் அழகான விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கி விடுகிறான். பின் பதில் கடிதம் எழுதுகின்றான்.

அன்புள்ள மனைவிக்கு,

நீ கூறியபடி நமக்கென்று ஒரு கார் வாங்கியது உனக்கு மகிழ்ச்சியூட்டக்கூடும் என்று நினைக்கின்றேன். நீ கூறியபடி நாம் ஆடம்பரமாக வாழலாம் . கவலைப்படாதே.

நான் இன்னும் சில மாதங்களில் ஊருக்கு வருகின்றேன். உனக்கு என்ன என்ன தேவை என்பதை எனக்கு தெரியப்படுத்து.

உடனே மனைவியும் ஏற்கனவே பட்டியலிட்டு வைத்திருந்த தேவைகளை கணவனுக்கு பதிலாக எழுதிவிட்டு கணவனின் வருகைக்காக காத்திருக்கின்றான்.

கணவன் வரும் நாள் அன்று மிக மகிழ்ச்சியாக புது வீட்டில் - புதிய காருடன் காத்திருக்கின்றாள். அப்பொழுது ஒரு தொலைபேசி அழைப்பு ஒன்று வருகின்றது.

ஏர்போர்ட்டிலிருந்து வரும் வழியில் சுல்தான் விபத்துக்குள்ளாகி மரணமடைந்து விட்டான் என்றும் பிணத்தை வாங்கிச் செல்லுமாறும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

அப்படியே இடிந்து போய் உட்காருகின்றாள் ஜமீலா. பின்பு நிலைமை உணர்ந்த உறவினர்கள் அந்தப் புதிய காரை எடுத்துக்கொண்டு சுல்தானின் பிணத்தை எடுக்க தயாராகும்பொழுது உறவினர்களுள் ஒருவர் ,

அட! புதுக்கார்ல பிணத்தை எடுக்கக் கூடாதுப்பா..ஏதாவது பழைய வண்டியை வாடகைக்கு பிடிச்சிட்டு போங்க எனக்கூற பின்பு பழைய வண்டி ஒன்றை வாடகைக்கு பிடித்துச் சென்றனர்.

புதிய வீட்டில் முதன் முதலில் பிணத்தைக் கொண்டு வரக்கூடாது என்றும் சில அறிவுஜீவி உறவினர்கள் கூற அவர்கள் வாழ்ந்த பழைய வீடொன்றில் சுல்தானின் பிணம் கொண்டு வரப்பட்டு மனைவி உறவினர்கள் கதறலுக்குப்பிறகு சுல்தானின் பிணம் அடக்கப்பட்டுவிட்டது

மனைவி ஜமீலா அந்தப் புதியகாரையும் - வீட்டையும் வெறித்துப் பார்த்தபடி நிற்கின்றாள்.

எங்கிருந்தோ அப்பொழுது திருக்குர்ஆனின் வாசகங்கள் காதில் வந்து விழுகின்றது

மண்ணறை செல்லும் வரையிலும் செல்வத்தை தேடிக்கொண்டே இருப்பீர்கள் என்று

gravatar

ஒரே நேரத்தில் பல இணைய கணக்குகளை அணுகுவது

பெரும்பாலும் நாம் பல்வேறு காரணங்களுக்காக ஒன்றுக்கு மேற்பட்ட ஈமெயில் முகவரி வைத்து இருப்போம். மெயில் வாசிக்கும் போது ஒவ்வொரு மெயில் முகவிரியில் லாகின் (login) செய்து அடுத்த முகவரிக்கு செல்ல logout செய்து மீண்டும் புதிய முகவரிக்கு செல்ல வேண்டி வரும்.

உதாரணமாக நான் ஜிமெயிலில் firstaccount@gmail.com, secondaccount@gmail.com என்று இரண்டு முகவரிகள் வைத்துள்ளதாக கொள்வோம். நான் இரண்டு முகவரியிலும் உள்ள மைல்களை படிக்க ஒவ்வொன்றாக தனித்தனியாக login & logout செய்யவேண்டும். இரண்டு மெயில் முகவரியிலும் ஒரே நேரத்தில் வேலை செய்ய முடியாது . ஏதாவது ஒன்றில் மட்டுமே செயல்பட முடியும். மற்றொன்றிற்கு செல்ல வேண்டும் எனில், ஏற்க்கனவே திறந்துள்ள மெயிலை logout செய்து விட்டு புதிய முகவரியில் login செய்ய வேண்டும்.

இந்த பின்னடைவை போக்கும் இதனை போக்கும் வகையில் Internet Explorer 8 -ல் ஓர் வசதி உள்ளது. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8 -ல் புதிய Session திறக்க வேண்டும்.


புதிய இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் விண்டோ திறக்கும். இப்போது இரண்டு விண்டோ க்களிலும் தனித்தனியாக வெவ்வேறு ஈமெயில் முகவரிகளின் மூலம் லாகின் செய்து உங்களால் செயல்பட முடியும்.


பயர்பாக்ஸ் இணைய உலாவியில் இந்த வசதியை பெற இந்த பயபாக்ஸ்நீட்சியை (Firefox Extension) உபயோகிக்கவும்.

இது ஈமெயிலுக்கு மட்டுமே ஆனதல்ல. நீங்கள் பல உறுப்பினர் கணக்குகள் வைத்துள்ள எல்லா தளங்களிலும் இது போன்று செயல்பட முடியும்.



gravatar

அறிவுப்பூர்வமான ஒரு வெடிகுண்டு!

Who Killed Karkare’ நூல் வெளியிடப்பட்டது

இந்தியாவை இந்துராஷ்டிரமாக உருவாக்க-வேண்டும் என்று நினைப்பது இந்துக்கள்கூட அல்ல - இந்து மதப் போர்வையில் மதங் கொண்டு திரியும் மூன்று சதவிகிதப் பார்ப்பனர்களே!

பார்ப்பனர்கள் வெளிப்படையாக நாங்கள் தான் அரசாளத் தகுந்தவர்கள் என்று மார்தட்டி-னால், மார்பும் இருக்காது, மண்டையும் இருக்காது.

அதற்காக அவர்கள் திசை திருப்பும் யுக்திதான் முஸ்லிம்கள் எதிர்ப்பு - முஸ்லிம் தீவிரவாதம் என்ற பூச்சாண்டி!

தீவிரவாதிகள் என்றால் முஸ்லிம்கள் என்று முத்திரை குத்த இந்த நாட்டில் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். அதனைப் பெருக்கிட, பதாகை பிடித்துக் காட்ட பார்ப்பன ஊடகங்கள் இருக்கின்றன.

இந்தியாவில் புலனாய்வுத் துறை இருக்கிறது -நிருவாக வர்க்கம் இருக்கிறது.

இவற்றை எல்லாம் வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் ஒரு நூல்தான் who Killed Karkare?.

நூலின் ஆசிரியர் மகாராட்டிர மாநிலத்தின் முன்னாள் அய்.ஜி. - காவல்துறை அதிகாரி எஸ்.எம். முஷ்ரிஃப் அய்.பி.எஸ்.

ஓய்வு பெற இன்னும் பல ஆண்டுகள் இருந்தும், இதற்குமேல் பெரும் பதவிகளுக்குச் செல்லும் வாய்ப்பு இருந்தும், அவற்றையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு தானாகவே முன்வந்து விருப்ப ஓய்வு (VRS) கொடுத்துவிட்டு, பார்ப்பனப் பாசிசக் கும்பலால் திட்டமிட்ட வகையில் பலியாக்கப்படும் உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் வீர சாகச பணியில் ஈடுபட்டு இருக்கிறார்.

மாலேகான் குண்டுவெடிப்பின் பின்னணியில் இருந்த ஒரு சதிகார கும்பலின் சிண்டைப் பிடித்து இழுத்து வந்து முச்சந்தியில் நிறுத்தியவர் கர்கரே என்னும் காவல்துறை அதிகாரியாவார்.

மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த மாலேகான் என்னும் இடத்தில் சிமி அலுவலகத்தின்முன் குண்டுவெடிப்பு 29.9.2008 அன்று நிகழ்ந்தது. 5 பேர் பலி; 90 பேர் படுகாயம்.

மோட்டர் பைக்கில் டைமர் கருவி பொருத்தப்பட்டு வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டது.

அந்த மோட்டர் காருக்கு உரிமையானவர் ஒரு பெண் சந்நியாசி. அவர் பெயர் சாத்வி பிரக்யா தாக்கூர். மாணவர் பருவந்தொட்டு பல்வேறு இந்துத்துவா அமைப்பில் இருந்தவர்.

குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவர். பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங்கின் ஆதரவும் உண்டு.

இந்தக் குண்டுவெடிப்பில் முதல் குற்றவாளி இராணுவத்தில் புலனாய்வுத் துறையில் பணியாற்றிய சிறீகாந்த் புரோகித் என்பவர்; மகாராட்டிர மாநிலம் நாசிக் என்னும் இடத்தில் இராணுவக் கல்லூரி ஒன்றை நடத்தி வருபவர்.

வெடிகுண்டுகளைத் தயாரிப்பது எப்படி? கையாளுவது எவ்வாறு? என்பன போன்ற பயிற்சிகளை இந்துத்துவாவாதிகளுக்கு அளிக்கும் இராணுவ அதிகாரி இவர்.

இவர்கள் பயன்படுத்திய வெடிகுண்டு தயாரிப்புக்கான வெடிமருந்தோ இராணுவத்தைத் தவிர வேறு எங்கும் கிடைக்க முடியாதது. மேலும் பல இராணுவத்தினர் இந்த வெடிகுண்டு குற்றத்தில் தொடர்புடையவர்கள்.

பாரதீய ஜனதா மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இராணுவத்தை இந்து மயமாக்கும் ஒரு திட்டம் அமல்படுத்தப்பட்டது.

விமானப்படைத் தளபதியாக இருந்து விடுபட்ட விஷ்ணுபகவத் இந்த உண்மையைப் பட்டாங்கமாய்ப் போட்டு உடைத்தார்; ஊடகங்களிலும் வெளிவந்தது.

நாசிக் இராணுவத்தில் பயிற்சி பெற்ற இந்துத்துவாவாதிகள் இந்திய இராணுவத் துறையில் ஆயிரக்கணக்கானோர் ஊடுருவியுள்ளனர் என்பது அதிர்ச்சியூட்டக் கூடிய, அதிரும் தகவலாகும்.

இந்தியாவை இந்து மயமாக்கு!, இந்திய இராணுவத்தையும் இந்து மயமாக்கு! என்பது இந்துத்துவாவாதிகளின் ஏற்றப்பாட்டாகும்.

அவர்கள் அதிகாரத்தில் இருந்த நேரத்தில், அதனைத் திட்டமிட்டுச் செய்துவிட்டனர். இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற 96 உயர்மட்ட அதிகாரிகள் பி.ஜே.பி.யில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

பி.ஜே.பி.யின் செயற்குழுக் கூட்டத்திற்கு இராணுவ அதிகாரிகள் அழைக்கப்பட்டனர் என்பதையும் இந்த நேரத்தில் நினைவூட்டிக் கொள்ளவேண்டும்.

மாலேகான் குண்டுவெடிப்புக் குற்றவாளிகள் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர்.

மாலேகானில் மட்டுமல்ல; பரிதாபாத், போபால், ஜெய்ப்பூர், இந்தூர், நாசிக் முதலிய இடங்களில் அரங்கேற்றப்பட்ட குண்டுவெடிப்புகளிலும் இதே கும்பலுக்குத் தொடர்பு உண்டு என்பதெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டது.

இராணுவ அதிகாரி புரோகித் தயாரித்து வைத்திருந்த திட்டமோ வெகு பயங்கரமானது. இசுரேலில் தஞ்சம் அடைந்து அங்கிருந்து இந்தியாவில் ஒரு போட்டி அரசை, இந்துத்துவா அரசை நடத்திட-வெல்லாம் திட்டமிட்டு இருந்தனர். வரைபடம், அரசமைப்புச் சட்டம், கொடி முதலியவை முதற்கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தன.

மடிக் கணினி (லேப்டாப்)யில் இருந்த பதிவுகள் அவர்களைக் காட்டிக் கொடுத்தன.

இவற்றையெல்லாம் கண்டுபிடித்தவர், விரிவாகக் குற்றப்பத்திரிகை தயாரிக்கக் காரணமாக இருந்தவர் தான் கார்கரே என்னும் காவல்துறை அதிகாரி.

4000 பக்கங்களைக் கொண்ட தகவல் அறிக்கையாக அது உருவாக்கப்பட்டு இருந்தது.

அவை வெளியில் வந்தால் ஆரிய ஆர்.எஸ்.எஸ். கும்பலின் பூர்வோத்திரமான அத்தனை அங்க மச்ச அடையாளங்கள் எல்லாம் பளிச் பளிச்சென்று மக்கள் மத்தியிலே அம்பலமாகியிருக்கும்.

இப்படிப்பட்ட ஓர் அதிகாரியை ஆரியம் விட்டு வைக்குமா? இதற்குமுன் விட்டு வைத்ததுதான் உண்டா?

ராமராஜ்ஜியத்தை உருவாக்குவேன் என்று சொன்னவரை மகாத்மாவாக்கியவர்களும் அவர்களே. நான் சொல்லும் ராமன் வேறு; இராமாயண இராமன் வேறு என்று காந்தியார் சொல்ல ஆரம்பித்ததும், அவரை துர் ஆத்மாவாகக் கருதி மார்பில் குண்டு பாய்ச்சி ரத்தம் குடித்த கும்பலாயிற்றே!

திட்டமிட்டார்கள், தீர்த்துக் கட்டிவிட்டார்கள் காவல்துறை அதிகாரி கர்கரேயை.

அதைப்பற்றிய நூல்தான் மகாராட்டிர மாநில முன்னாள் காவல்துறை அய்.ஜி. எஸ்.எம்.முஷ்ரிஃப் அவர்களால் எழுதப்பட்ட ‘‘Who Killed Karkare?’’ என்ற நூலாகும். 2009 இல் முதல் பதிப்பாக வெளிவந்து, 2010 இல் மூன்றாவது பதிப்பாகவும் வெளிவந்துவிட்டது.

அந்த நூலைப் பற்றிய அறிமுக விழாதான் திராவிடர் கழகத்தின் சார்பிலும், பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பிலும் நேற்று (2.2.2010) மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்றதாகும்.

336 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் விலை ரூபாய் 300. நேற்றைய விழாவில் ரூபாய் 250க்கு அளிக்கப்பட்டது.

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் வெளியிட, திராவிடர் கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து பச்சையப்பன் கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர் பேராசிரியர் பி.ஆர். அரங்கசாமி, தணிக்கையாளர் ஆர். இராமச்சந்திரன், அப்துல் காதர், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வா. நேரு, பொதுச்செயலாளர் வடசேரி இளங்கோவன், புதுச்சேரி மு.ந. நடராசன் முதலியோர் பெற்றுக்கொண்டனர்.

பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வீ. குமரேசன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

வேர்கள் பதிப்பக உரிமையாளர் எம். குலாம் முகம்மது அவர்கள் தன் உரையில் பார்ப்பனியத்தின் பயங்கரத் தன்மையை எடுத்துக் கூறினார்.

பார்ப்பனர்களால் இந்தியாவுக்கே பேராபத்து சூழ்ந்துவிட்டது.

இவர்களிடமிருந்து இந்தியாவை மீட்கவேண்டும்.

பெரியார் தமிழ்நாட்டிலிருந்து மகாராட்டிரத்திற்குச் சென்றுள்ளார். இந்நூலில் பெரியார் பற்றி நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய தலைமுறையினருக்குப் பெரியார் பற்றி சரியாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், வரப்போகும் தலைமுறையில் நடக்க இருக்கும் புரட்சிக்கு பெரியார்தான் கட்டியம் கூறுவார் என்று அவர் சொன்னபோது கலகலப்பான கைதட்டல்.

பார்ப்பனர்களின் கைக்குள் இருக்கும் உளவுத் துறையை விமர்சிப்பது என்பது சாதாரணமானதல்ல. முஷ்ரிஃப் அவர்கள் மிகவும் விரிவாகவே உளவுத் துறையை விமர்சித்திருக்கிறார்.

குடியரசுத் துணைத் தலைவர் அமீர் அன்சாரி அவர்-கள்-கூட அண்மையில் ஒரு கருத்தைக் கூறியுள்ளார். உளவுத் துறை என்பது யார் ஒருவருக்காவது பதில் சொல்லக் கடமைப்பட்டதாக (Accountability) இருக்கவேண்டும் என்று கூறியிருப்பது இந்நூலுக்குக் கிடைத்த வெற்றியாகும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த நூலுக்குப் பிறகுதான் பாதுகாப்புத் துறை ஆலோசகராக இருந்த பாலக்காட்டுப் பார்ப்பனரான எம்.கே. நாராயணனும் அந்தப் பொறுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளார்.

திராவிட இயக்கப் பாரம்பரியம் உள்ள பெரியார் அவர்களுக்குப் பிறகு அந்தப் புரட்சியைத் தொடர்ந்து நடத்திச் செல்லும் வீரமணியார் தலைமை வகித்து நடத்தும் இந்த நிகழ்ச்சி புதிய தொடக்கத்தின் வீச்சு என்று குறிப்பிட்டார் குலாம் முகம்மது அவர்கள்.

வி.டி. ராஜஷேகர் ஷெட்டி

தலித் வாய்ஸ் ஆசிரியரும், சமூகநீதித் தளத்தில் தடம் பதித்து வருபவருமான பெங்களூரு வி.டி. ராஜஷேகர் அவர்கள் தம் உரையில் சுருக்கமாகக் குறிப்பிட்டதாவது:

இந்நாட்டில் பார்ப்பனர்களின் முதல் பலி முசுலிம்களே; ஆனால், இந்த உண்மையை எந்த அளவுக்கு முஸ்லிம்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று தமது ஆதங்கத்தைத் தெரியப்படுத்தினார்.

இந்தியா முழுமையும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை முஸ்லிம்கள் சிறையில் இருந்து வருகின்றனர். அவர்கள் விடுவிக்கப்படவேண்டும். முஸ்லிம்கள் முஷ்ரிஃப் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும்.

தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசில் இருந்தபோதே 1925 ஆம் ஆண்டில் சேலத்தில் பேசிய பொதுக்கூட்டம் ஒன்றில் தொலைநோக்கோடு ஒரு கருத்தைக் கூறியுள்ளார். மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுவான இந்து ஏடே, தான் வெளியிட்ட மலரில் பெரியார் அவர்களின் கருத்தை வெளியிட்டுள்ளது.

வெள்ளைக்காரர்கள் இந்தியாவில் இருக்கும்போதே பார்ப்பனர்கள் ஆதிக்கத்திற்கு ஒரு முடிவை ஏற்படுத்தவேண்டும். இல்லாவிட்டால், இந்நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் பார்ப்பனர்களின் வல்லாண்மைக் கொடுமையின்கீழ் துன்பப்பட நேரிடும் என்று எச்சரித்தார்.

அதுதான் இன்றுவரை நடந்துகொண்டிருக்கிறது.

முஷ்ரிப் அவர்களால் எழுதப்பட்ட இந்த நூல் அறிவுப்பூர்வமான வெடிகுண்டாகும். இந்த நூல் வெளிவந்த பின் இந்தியாவின் ரா, அய்.பி. போன்ற அமைப்புகள் நடுங்கிக் கொண்டிருக்கின்றன என்று குறிப்பிட்டார்.

தமிழர் தலைவர் கி.வீரமணி

நூலினை அறிமுகப்படுத்திய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பெரும் அளவு ஆங்கிலத்தில் உரையாற்றினார். இடையிடையே தமிழிலும் விளக்கினார்.

இங்குள்ள முசுலிம்கள் கைபர் கணவாய் வழியாக இந்த நாட்டிற்கு வந்தவர்கள் அல்லர். இங்குள்ளவர்கள் இங்கே பிறந்தவர்கள்தாம். அவர்களை அந்நியர்கள் என்று கூறக் கூடியவர்கள் தான் உண்மையிலே அந்நியர்கள்.

முஸ்லிம் தீவிரவாதி என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். தீவிரவாதிகளில் என்ன முஸ்லிம் தீவிரவாதிகள் இந்து தீவிரவாதிகள்? முஸ்லிம் தீவிரவாதி என்று சொல்பவர்கள் இந்து தீவிரவாதி என்று சொல்கிறார்களா?

இங்கு இந்து ராஷ்டிரத்தை உருவாக்க வேண்டும் என்று ஒரு கூட்டம் துடிக்கிறது. விசுவ ஹிந்து பரிஷத்தின் தலைவராக இருந்தவர் கரண் சிங். ஏன் அவர் அந்த அமைப்பிலிருந்து விலகினார்? அதற்கான காரணத்தை வெளிப்படையாகக் கூறியிருக்கிறாரே.

அவர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குப் பதிலாக மனுதர்மத்தைக் கொண்டு வர விரும்புகிறார்கள் என்று சொல்லித்தானே கரண்சிங் அந்த அமைப்பிலிருந்து வெளியேறினார் என்ற ஓர் அரிய தகவலை மன்றத்தில் தெரிவித்தார் ஆசிரியர்.

கர்கரேயை அவர்கள் கொல்லவில்லை, உண்மையை, நீதியைக் கொன்று இருக்கிறார்கள். அந்த உண்மைகளையும், மறைக்கப்பட்ட நீதிகளையும் வெளியில் கொண்டு வரும் முயற்சியில் நூலாசிரியர் வெற்றி பெற்றுள்ளார்.

நம் எதிரிகள் நாணயமானவர்கள் அல்லர். என் உயிருக்கே மூன்று முறை குறி வைத்தனர். நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். (உரை முதல் பக்கம் காண்க). எஸ்.எம்.முஷ்ரிஃப்

நூலாசிரியர் எஸ்.எம்.முஷ்ரிஃப் அவர்கள் ஏற்புரையாகக் கூறியதாவது.

நான் இந்த அளவு பெரிய கூட்டத்தில் கலந்து கொண்டதில்லை. இந்தப் பிரச்சினைக்காக இவ்வளவு பெரிய கூட்டம் இங்கே கூடியிருக்கிறது என்றால், அதற்குக் காரணமான பெரியார் ராமசாமி அவர்களை நினைத்துப் பார்க்கிறேன் (கைதட்டல்).

இதனை இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்த வீரமணி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மும்பையில் தீவிரவாதிகளால் தாக்குதல் தொடுக்கப்பட்டது. முன்கூட்டியே அய்.பி.க்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அதை மாநில அரசுக்கு அய்.பி. தெரிவிக்காதது ஏன்?

மராட்டியத்தில் குண்டு வெடிப்பை நடத்தியவர்-கள் இந்துப் பயங்கரவாதிகள். அவர்களின் சதித் திட்டம் அவர்களிடம் இருந்த லேப்டாப் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றையெல்லாம் வெளியில் கொண்டு வந்த காவல்துறை அதிகாரி தான் கார்க்கரே.

அவரைத்தான் திட்டமிட்ட வகையில் படுகொலை செய்துள்ளார்கள். வேறு வகையில் இதனைச் செய்திருந்தால் அது வெளிச்சத்துக்கு வந்துவிடும். இது போன்ற சந்தர்ப்பத்தில் கொலை செய்வது அவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது.

அபிநவ் பாரத் என்பதும் ஆர்.எஸ்.எஸ்.தான். பார்ப்பனர்கள் அதிக ஆதிக்கம் கொண்ட அமைப்பு இது. இஸ்ரேல் நாடுவரை தொடர்பு வைத்துக் கொண்டிருந்தனர்.

நாக்பூர், புனே போன்ற இடங்களில் 53 இடங்களில் கூட்டங்கள் நடத்தியிருக்கின்றனர்.

காமா மருத்துவமனைக்கு இராணுவத்தினரை அனுப்புமாறு கர்க்கரே கேட்டுக் கொண்டும், அதனைச் செயல்படுத்தத் தவறியுள்ளனர். இந்த நிலையில் கர்க்கரே அங்கே சென்றபோது சுட்டுக் கொன்றுள்ளனர்.

இதன் பின்னணியில் உள்ள உண்மைகள் வெளியில் கொண்டு வரப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த நூலை எழுதினேன். இந்த நூலை வெளியிட்டபோது பார்ப்பனர் ஊடகங்கள் இருட்டடிப்பு செய்துவிட்டனர். புனே மிரர் என்னும் ஓர்ஏடு மட்டும் விமர்சித்திருந்தது.

எனக்குக் கொஞ்சம் சோர்வுகூட இருந்தது. ஆனால் இந்தப் பெரியார் மண்ணுக்கு நான் வந்த பிறகு அந்தக் சோர்வு எல்லாம் ஓடோடிவிட்டது. எனக்குப் புதுத்தெம்பே ஏற்பட்டு விட்டது!

பார்ப்பனர் அல்லாதார் விழிப்புணர்வு பெற வேண்டும்.

பார்ப்பனர் அல்லாதாரின் எழுச்சியிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இசுலாமியர்களை பயங்கரவாதிகள் என்று காட்ட முயற்சிக்கின்றனர். இந்தச் சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும் என்று கூறினார்.

தென்சென்னை பகுத்தறிவாளர் கழக செயலாளர் சி.செங்குட்டுவன் நன்றி கூறினார்.

இரவு 9.30 மணிக்கு விழா நிறைவுற்றது. மன்றம் நிரம்பி வழியும் அளவிற்குப் பலதரப்பட்ட மக்களும் கூடியிருந்தனர்

- நன்றி விடுதலை (www.palanibaba.blogspot.com)